ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், அரசூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. இராஜேந்திரன் – திருமதி ஸ்ரீதேவி தம்பதியரின் இளைய மகள் செல்வி கோபிகா, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடத்தைப் பகிர்ந்து தமிழகத்தின் கவனத்தை ஈர்த்தார். அவரது இந்த அபாரச் சாதனைக்கு கல்வியாளர்கள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்தன.
இந்தச் சாதனையைப் பாராட்டும் வகையில், கடந்த 17.05.2024 அன்று அரசூர் கிராம மக்கள் சார்பில் சிறப்பான பாராட்டு விழா நடைபெற்றது. சரண் பள்ளி தாளாளர் கே.என்.ஆர். ரங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், த.வீ.க. பண்பாட்டுக் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் நீதிபதியுமான தங்கராஜ், நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் மு. பழனிச்சாமி, மூத்த வழக்கறிஞர் பி. பழனிச்சாமி, விடுதலைக்களம் கட்சியின் நிறுவனத் தலைவர் கொ. நாகராஜன், மு. சரவணன், தொழிலதிபர்கள் கண்ணுச்சாமி, பி.கே. பழனிச்சாமி, முருகேசன், பட்டக்காரர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, கோபிகாவுக்கு பாராட்டுச் சான்றிதழ், தங்க நாணயம், கேடயம் வழங்கி வாழ்த்தினர்.
இந்நிலையில், செல்வி கோபிகா உயர்கல்வியிலும் தொடர்ந்து மாநில அளவிலான சாதனைகளைப் படைத்து, அவர் விரும்பும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) துறையில் உயர்கல்வி பயின்று, புதிய கண்டுபிடிப்புகள் மூலம் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்ற நோக்கில், சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் அவருக்கு கணினி (கம்ப்யூட்டர்) வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.
இதற்காக 29.09.2024 அன்று நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என். பவுல்ராஜ் அவர்கள், மாணவி கோபிகாவுக்கு கணினியை பரிசாக வழங்கினார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் மாநிலக் காப்பாளர் முனுசாமி, மாநிலத் துணைச்செயலாளர் முத்துசாமி, சமுதாயத் தலைவர்கள் இராமசாமி, பட்டக்காரர் சசி, மோகன், சிவராஜ், ஏ.வி.எம். முரளிதரன், தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவி கோபிகாவை வாழ்த்தி, அவரது எதிர்கால கல்விப் பயணம் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துத் தெரிவித்தனர்.
மேலும், மாணவி கோபிகாவுக்கு கணினி வழங்குவதற்கான உதவியை வழங்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் "பர்பிள் கிளப்" உறுப்பினர் திரு. சிவசாமி அவர்களுக்கு, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
"திறமையான மாணவர்களை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதே, சமூக முன்னேற்றத்திற்கான உண்மையான முதலீடு" என்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.