தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்! • புதிய அரசுக்கு வாழ்த்து; மூத்த அமைச்சர்களை சந்தித்த இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள்! • மாணவர்களின் தகுதியைச் சோதிக்கும் அரசுக்கு, நேர்மையாகத் தேர்வு நடத்தும் தகுதி இருக்கிறதா? • பெரியாரின் பெருந்தொண்டிற்கு தொண்டரின் கணிக்கை! • sample • உலக வரலாற்றை 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிய மாபெரும் போர்!
விளம்பரங்கள்
சமுதாயப் பணியின் நற்றொண்டர் திரு.நல்லையா

சமுதாயப் பணியின் நற்றொண்டர் திரு.நல்லையா

Admin 26 May 2020 | 09:43 PM
பகிர்:

திரு.ந.நல்லையா அவர்கள் 1942ஆம் ஆண்டு மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகாவிலுள்ள சக்கரப்ப நாயக்கனூர் கிராமத்தில், திரு. பி. நல்லையா – திருமதி அழகம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

இவரது துணைவியார் திருமதி ந. சுப்புலட்சுமி. இவர்களுக்கு ந. துளசிராம், ந. துளசி லட்சுமணராஜ் என்ற இரு மகன்களும், ந. கீதாஞ்சலி என்ற மகளும் உள்ளனர்.

இயல்பிலேயே சமுதாயப் பணியில் மிகுந்த நாட்டம் கொண்ட திரு. நல்லையா அவர்கள், தனது 14வது வயதிலேயே சமூகப் பெரியோர்களின் தொடர்பைப் பெற்று, சமுதாயச் சேவையில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். கல்லூரிக் காலத்தில் நண்பர்களுடன் இணைந்து கட்டபொம்மன் மன்றம் உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவராகவும் விளங்கினார்.

ஆசிரியர் பணியை விருதுநகரிலுள்ள தனியார் பள்ளியில் தொடங்கிய அவர், பின்னர் முதுகலைப் பட்டம் பெற்று, ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். ஆசிரியர் பணியுடன் இணைந்து சமுதாயப் பணியையும் தொடர்ந்து மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும், தொலைதூரக் கிராமங்கள் வரை பயணம் செய்து, மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழைப் பரப்பும் வகையில் கட்டபொம்மன் கொடியேற்றி, எண்ணற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதன் மூலம் மாநிலம் முழுவதும் சமுதாய மக்களிடையே நன்கு அறியப்பட்ட தலைவராக உருவெடுத்தார்.

அரசு மற்றும் பெருநிறுவனங்களில் பணிபுரிபவர்கள் சாதிய அமைப்புகளில் நேரடியாகச் செயல்படுவதில் உள்ள சிரமங்களை உணர்ந்து, அனைவரும் சமூகப் பணியில் இணையும் நோக்கில், 1980களில் மாவீரன் கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் தொடங்கப்பட்டபோது அதன் தொடக்ககால முன்னணி தலைவர்களில் ஒருவராகப் பொறுப்பேற்றார்.

1983ஆம் ஆண்டு பண்பாட்டுக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்று, இளைஞர்களை சமூகப் பணியில் ஈடுபடுத்துவதிலும், சமுதாயச் செய்திகளை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதிலும் சிறப்பாகப் பணியாற்றினார். அமரர் க. சுப்பு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் ஆலோசனையின் பேரில், "வீரபாண்டியன்" மாத இதழைத் தொடங்கி நடத்தி, சமுதாய விழிப்புணர்வை பரப்புவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றினார்.

அவரது தலைமையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் மாண்புமிகு அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முப்பெரும் விழா மிகுந்த வெற்றியுடன் நடத்தப்பட்டது. அந்நிகழ்வில்,

பெருங்கவி கவிராஜ பண்டிதர் ஜெக வீரபாண்டியனாரின் நூற்றாண்டு விழா,

அமரர் க. சுப்பு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் வெளிநாட்டு பயண வெற்றி விழா,

காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றி அண்ணா விருது பெற்ற அமரர் டி.எஸ்.பி. வை. ஜெயராஜ் அவர்களுக்கு பாராட்டு விழா

ஆகியவை சிறப்பாக நடைபெற்றன.

பண்பாட்டுக் கழக விதிகளின்படி, தலைமை நிர்வாகிகள் மூன்று ஆண்டுகள் மட்டுமே பதவி வகிக்க வேண்டும் என்ற நடைமுறையை மதித்து, 1987ஆம் ஆண்டு பொறுப்பிலிருந்து விலகி இளைஞர்களுக்கு வழிவிட்டார்.

1989ஆம் ஆண்டு, இராஜகம்பள மகாஜன சங்கத்தின் மாநிலத் தலைவராக அமரர் மு. சுந்தரராஜன், பொதுச் செயலாளராக அமரர் வை. பாலுச்சாமி நாயக்கர் ஆகியோர் இருந்த காலத்தில், திரு. நல்லையா அவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளராகப் பணியாற்றினார்.

அக்காலகட்டத்தில், அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் அவர்களின் பெருமுயற்சியுடன், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரில் மாவட்டம் உருவாக வேண்டும் என்ற கோரிக்கைக்காக மகாஜன சங்கத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

மேலும், மகாஜன சங்கத்தின் அதிகாரப்பூர்வ இதழான "இராஜகம்பள முரசு" பத்திரிகையின் ஆசிரியராகவும் சில காலம் பணியாற்றினார்.

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவாக இந்திய தபால் துறை அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மகாஜன சங்கத்தின் மாநிலப் பொருளாளர் திரு. சங்கையா நாயக்கருடன் டெல்லி சென்று முயற்சிகளை மேற்கொண்டார். டெல்லி ம.தி.மு.க. அமைப்பாளராக இருந்த அமரர் திரு. தேவராஜ் அவர்களின் ஒத்துழைப்புடனும், "பாராளுமன்றச் சிங்கம்" திரு. வைகோ அவர்களின் பெருமுயற்சியினாலும், முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஜக்மோகன் அவர்களைச் சந்தித்து ஒப்புதல் பெறும் பணியில் முக்கியப் பங்காற்றினார்.

அதன் விளைவாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில், அன்றைய தமிழக முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தபால் தலையை வெளியிட, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பெற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது.

அதே விழாவில், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 200ஆவது பிறந்தநாள் நினைவு மலரைத் தயாரித்து வெளியிடும் பொறுப்பையும் திறம்பட நிறைவேற்றி, சமுதாயத்திற்கு பெருமை சேர்த்தார்.

2002ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அவர், சென்னையில் குடியேறி, மீனாட்சி மெட்ரிக்குலேஷன் பள்ளியின் முதல்வராகப் பணியாற்றினார்.

2004ஆம் ஆண்டு சென்னை வாழ் சமுதாயப் பெரியோர்கள், ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்களின் முயற்சியால் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் தொடங்கப்பட்டபோது, அதன் மூத்த ஆலோசகர்களில் ஒருவராக இணைந்து தொடர்ந்து சமூகப் பணியில் ஈடுபட்டார்.

தாம் பணியாற்றிய பள்ளியில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சங்கத்தின் மாதாந்திரக் கூட்டங்கள் நடைபெற அனுமதி பெற்று வழங்கியதன் மூலம், இன்று தலைநகர் சென்னையில் சுமார் 15,000 சதுர அடியில் சொந்தக் கட்டிடத்துடன் வலுவாக வளர்ந்திருக்கும் சங்கத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட முக்கியப் பங்காளிகளில் ஒருவராகத் திகழ்கிறார்.

முதுமை வந்தபோதும் சமூக மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து தன்னை அர்ப்பணித்து வரும் அவர், சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்திற்கு ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை வழங்கிய "பர்பிள் கிளப்" உறுப்பினர்களில் ஒருவராகவும் உள்ளார்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக இடையறாத சமூகப் பணியில் தன்னை அர்ப்பணித்துள்ள திரு. ந. நல்லையா அவர்களின் அரிய சேவை மேலும் பல்லாண்டுகள் தொடர இறைவனைப் பிரார்த்தித்து, மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

சமூக – சமுதாய ஆர்வலர்கள் தமிழ்நாடு Thiru.N.Nallaiah Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண